பா.ஜ.க. ஆட்சியில் நாட்டை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்-சிதம்பரம்

டெல்லி, டிசம்பர்-05

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். 

நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப்பற்றி பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காக்கிறார். அமைச்சர்களோ மோசடியிலும் வன்முறைச் சம்பவங்களில் திளைத்துள்ளனர்.

பொருளாதார விவகாரங்களில் பாஜக அரசு ஒன்றன் பின் ஒன்றாக தவறு செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் குற்றமற்ற அரசியல் தலைவர்களை சிறை வைத்திருப்பதும் வருத்தமளிக்கிறது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. 

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அழுத்தம் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டாலே அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். 

பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள இந்த அரசால் முடியாது, நிதியமைச்சரின் பேச்சு இந்த அரசின் மன நிலையை வெளிப்படுத்துகிறது. மத்திய நிதியமைச்சர் வெங்காயம் சாப்பிடுவது இல்லை, அதனால் அவர் ஏன் வெங்காயம் விலை உயர்வு குறித்து கவலைப்பட போகிறார்?

பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *