ஸ்டாலினை வாழ்த்தியது சபை நாகரீகம்-பி.டி.அரசகுமார்

சென்னை, டிசம்பர்-05

பாஜகவில் என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் சாதாரண திருமண நிகழ்வில் பேசியதை பெரிதுப்படுத்தி எனக்கு மன உளைச்சலை உருவாக்கினார்கள். அதனால் பாஜகவில் என்னால் நீடிக்க முடியவில்லை என பி.டி.அரசக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினை திருமண நிகழ்ச்சியில் புகழ்ந்துப் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அரசக்குமார், அவர் முதல்வராகும் நாள் விரைவில் வரும் அதை கண்டுகளிக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தது பாஜகவுக்குள் சர்ச்சையை கிளப்பியது. அவர்மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டர் அரசக்குமார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பி.டி.அரசகுமார் பேசியதாவது: “பாஜகவில் எனக்கு சுயமரியாதை இல்லாமல் செல்லும் ஒரு சூழலை உருவாக்கினார்கள். திருமண நிகழ்ச்சியில் பேசிய பின்னர் எனக்கு கடுமையான மனச்சோர்வு ஏற்படும் வகையில் சூழ்நிலையை உருவாக்கினார்கள். திருமண நிகழ்ச்சியில் நாகரிகமாக பேசிய ஒரு பேச்சுத்தான் அது. வழக்கமாக பேசும் ஒரு நிகழ்வுதான்.

எதார்த்தமான ஒரு விஷயத்தைத்தான் நான் பதிவு செய்தேன். ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஸ்டாலின் நினைத்திருந்தால் குறுக்குவழியில் முதல்வராகியிருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயக வழியில் முதல்வராகவே விரும்பினார், அப்படியே நடக்கிறார். அதன்படி அவர் முதல்வர் ஆவார் என்பதை யதார்த்தமாகத்தான் பேசினேன். இது ஒரு அரசியல் நாகரிகம்தான், அதற்கு பின்னர் எனக்கு கட்சிக்குள் கடுமையான நெருக்கடி வந்தது.

எனக்கு ஆகாதவர்கள் எனக்கெதிராக செயல்பட்டார்கள். எனது வளர்ச்சியை பிடிக்காமல் தடுக்கும் நோக்கில் செயல்பட்டார்கள். மாநில அலுவலகச் செயலாளர் நரேந்திரன் எனக்கு நோட்டீஸ் அனுப்புகிறார். அது விளக்கம் கேட்கும் நோட்டீஸ்தானே அதை எனக்கு அனுப்பாமல் அவர் ஏன் ஊடகங்களுக்கு கொடுக்கவேண்டும். அப்படியானால் இதன் நோக்கம் என்ன.

அதனால் நான் வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் திமுகவில் உள்ள தலைவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். ஆதரவு தந்தார்கள். ஆகவே நான் திமுகவில் இணைகிறேன். இது எனது தாய்க்கழகம் என்பதால் நான் திமுகவில் இணைந்ததில் புதுமை ஒன்றுமில்லை. நான் பொறுப்பு எதையும் கேட்கவில்லை, திமுக தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதன்படி நடப்பேன்.

பாஜக வளராமல் இருக்க ஒரு சிலர் காரணமாக இருக்கிறார்கள். நான் எடுத்த முடிவை எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் ஏற்றுக்கொண்டால் தாரளமாக திமுகவில் இணையலாம். திருமண நிகழ்வில் திமுகவில் இணைவதற்காக திட்டமிட்டு பேசிய பேச்சல்ல இயல்பாக நாகரிகமாக பேசிய பேச்சு அது, ஆனால் அதற்கு இவ்வளவு பொருள் கற்பித்துவிட்டார்கள்” என அரசக்குமார் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *