பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

டெல்லி, டிசம்பர்-05

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் ஓய்வுக்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், நவ.30ல் முடிந்தது. அவரை, பணியில் இருந்து விடுவிப்பதாகவும், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமிக்கப்பட்டு, பதவியேற்று உள்ளார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங், 2012ல் இருந்து, இந்தாண்டு நவ.30 வரை, அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணியால், காலதாமதம் ஏற்படுவதாக, பொன் மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை தரவில்லை எனக்கூறி பொன்.மாணிக்கவேல் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் திங்கட்கிழமை(டிச.,9) அன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *