ஜெ. 3-ம் ஆண்டு நினைவுதினம்: மெரினாவில் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை

சென்னை, டிசம்பர்-05

ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடத்தில் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொண்டனர்.

பேரணியின் முடிவில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர். 

இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அதிமுக கிளை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. ஜெயலலிதா நினைவு தின பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *