இந்தி கட்டாய பாடமல்ல, விருப்ப பாடம் தான் – அமைச்சர் விளக்கம்

சென்னை, டிசம்பர்-04

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை தரமணியில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி, ஒரு உலக மொழி கற்பிக்கவேண்டும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். அந்த வழியில், உலக மொழியான பிரஞ்சு, மராட்டி, தெலுங்கு, இந்தி ஆகியவை கற்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம். மாணவர்களிடம் கருத்து கேட்ட பிறகு தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழின் பெருமையை பிற நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல மற்ற மொழிகள் கற்பது அவசியம். எந்த மொழிகள் படிக்கவேண்டும் என்பதை மாணவர்கள் தான் தேர்வு செய்யவேண்டும். இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான். இந்தியை திணிக்க வில்லை, அடிப்படையில் இந்தி கற்பதில் என்ன தவறு. தமிழ் என்பதே அதிமுக அரசின் உயிர் மூச்சு. இந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக வந்து பயிற்சி அளிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆண்டுக்கு 100 மணிநேரம் மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *