கட்சி தொடக்கம் எப்போது என ரஜினியே அறிவிப்பார்-தமிழருவி மணியன்

சென்னை, டிசம்பர்-04

கட்சி தொடங்குவது குறித்து எந்த முடிவாக இருந்தாலும் ரஜினி தான் சொல்ல வேண்டும் என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின் தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “எந்த முடிவாக இருந்தாலும் அவர்தான் சொல்ல வேண்டுமே தவிர, அவருக்காக என்னால் சொல்ல முடியாது. அவர் எப்போது கட்சி தொடங்குவார் என்பதை அவரே ஊடகத்தை அழைத்துச் சொல்வார்” என்றார்.

நிகழ்ச்சியொன்றில் அமைச்சர்களை விமர்சித்தது குறித்து ரஜினி ஏதும் சொல்லவில்லையே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது என் தனிப்பட்ட கருத்து. நான் மேடையில் பேசுவதற்கெல்லாம் ரஜினி கருத்து சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.

நான் இந்த ஆட்சியை எப்படி பார்க்கிறேன் என என் கருத்தை மேடைகளில் பகிர்ந்து கொள்கிறேன். நான் சொல்லும் கருத்து தமிழருவி மணியனுடைய கருத்து. அதற்கும் ரஜினிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நான் உண்மையை உங்களிடம் சொல்கிறேன். மறைத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஒரு அன்புச் சகோதரனாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க மட்டும் தான் வந்தேன். குடும்ப நலன், உடல்நலம் குறித்து விசாரித்தேன். மகிழ்ச்சியாக திரும்புகிறேன்” என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *