எஸ்.பி.ஜி. பாதுகாப்பை எல்லோருக்கும் வழங்கமுடியாது-அமித்ஷா

டெல்லி, டிசம்பர்-03

எஸ்.பி.ஜி. (சிறப்பு பாதுகாப்பு குழு) சட்டப் பிரிவில் மாற்றம் கொண்டு வருவதற்கான விவாதம் இன்று ராஜ்யசபாவில் நடந்தது. விவாதம் துவங்கியதும், காங்கிரஸ் எம்.பி. க்கள் சோனியா குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி., வாபஸ் பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பா.ஜ.க. அரசு அரசியல் செய்கிறது என காங்., எம்.பி. விவேக்தன்கா கூறினார்.

இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்; எஸ்.பி.ஜி., என்பது தலைவர்களின் தரத்தை காட்டி கொள்ளும் அடையாளமாக இருக்க எதிர்கட்சிகள் ஆசைப்படுகின்றன. பாதுகாப்பு என்பது சாதாரண குடிமகனுக்கும் வழங்குவது அரசின் கடமை. தற்போது பிரதமர் மோடிக்கு மட்டும் இந்த பாதுகாப்பு, நடைமுறையில் உள்ளது.

இதுவும் இன்னும் 5 ஆண்டுகளில் நீக்கப்பட்டு விடும். கடந்த கால பிரதமர்கள், நரசிம்மராவ், மன்மோகன்சிங் உள்ளிட்டவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும்போது சோனியா குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பு குழு வாபஸ் பெறப்பட்டதும் இது கேள்வி கேட்கப்படுகிறது, விமர்சனம் வருகிறது. நாங்கள் வாரிசு அரசியலை ஏற்கமாட்டோம்.

இது சோனியா குடும்பத்திற்கானது அல்ல. அரசியல் பழிவாங்கும் நோக்கம் என காங்கிரஸ் விமர்சிக்கிறது. இது குறித்து பேச காங்கிரசுக்கு எவ்வித அருகதையும் இல்லை. பிரியங்கா வீட்டில் கார் புகுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அதன் பின்னர், எஸ்.பி.ஜி., (சிறப்பு பாதுகாப்பு குழு) சட்ட பிரிவில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்ட திருத்தம் குரல் ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் காங்., உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *