சுவர் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

மேட்டுப்பாளையம், டிசம்பர்-03

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

மேலும், உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச்சுவர் விழுந்த இடத்தையும் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: 17 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. சுற்றுச்சுவர் கட்டிய சிவ சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கல்.

ஏற்கனவே பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலா ரூ.4 லட்சத்தோடு சேர்த்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.6 லட்சமும், மொத்தமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு புதியதாக வீடு கட்டித்தரப்படும்.

அதுமட்டுமில்லாது, விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள ஓட்டு வீடுகளுக்கு பதில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடு கட்டித்தரப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம், அரசியல் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் எல்லாதையும் அரசியலாக்க முயற்ச்சிக்கிறார். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *