மேட்டுப்பாளையம் விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குக-விஜயகாந்த்

சென்னை, டிசம்பர்-03

மேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கனமழையின் காரணமாக நடூர் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகள் தரைமட்டமாகின. இதில், இடிபாடுகளில் சிக்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் அமைத்தவரைக் கைது செய்ய வேண்டும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் குடும்பத்திற்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழக அரசு மற்ற இடங்களிலும் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *