மழை நீர் சேகரிப்பால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை, டிசம்பர்.2

சென்னையில்   மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் சீரமைப்பு, மழை நீர் சேகரிப்பு  கட்டமைப்பு பணிகளால்  மழை நீர் தேக்கம் குறைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24 x 7 மணி நேரம் கட்டுப்பாட்டு அறையின் 044 25384520, 044 25384530, 044 25384540 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன. மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன.

176 நிவாரண மையங்கள்

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களும் மற்றும் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளனர்.

பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகால பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார்நிலையில் உள்ளன.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ்நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கினைப்பு குழு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் (30.11.2019) காலை 8.30 மணி முதல் நேற்று (1 ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக 72 மி.மீ. மழை பெய்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி நேர நிலவரப்படி 19 இடங்களில் மழைநீர் தேங்கியும் 11 இடங்களில் மரக்கிளைகள் விழுந்தும் உள்ளன. அனைத்து இடங்களிலும் தேங்கிய மழைநீர் மற்றும் விழுந்த மரக்கிளைகள் சென்னை மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி சரிசெய்யப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கவில்லை

சென்னை மாநகராட்சி 1,894 கி.மீ. நீளத்திற்கு 7,351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஏதுவாக சுமார் ரூ.35.05 கோடி செலவினத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் விரிவாக்கப் பகுதிகளான, அம்பத்தூர் மண்டலம், வளசரவாக்கம் மண்டலம் மற்றும் ஆலந்தூர் மண்டலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டுப்பட்டுள்ளன. இதற்கு முன்னால், பல ஆண்டுகளாக மழைநீர் தேங்கி பிரச்சனையாக இருந்த இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட பிறகு வெள்ளம் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், பாடிக்குப்பம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய், நொளம்பூர் கால்வாய் மற்றும் அம்பத்தூர் சிட்கோ கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்தக் கால்வாய்கள் ஆழம் மற்றும் அகலப்படுத்தப்பட்டு அவைகளில் வெள்ளத்தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தக் கால்வாய்களின் வெள்ளநீர் கொள்ளவு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, வெள்ளநீர் உடனடியாக வெளியேறி வெள்ளம் தேங்காத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், எம்.ஜி.ஆர். கால்வாய், ஏகாங்கிபுரம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவஹர் கால்வாய், டி.வி.எஸ். கால்வாய், மாம்பலம் கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய், ராஜ்பவன் கால்வாய், ரெட்டிகுப்பம் கால்வாய் போன்ற 30 சிறிய கால்வாய்களை பராமரித்து வருகிறது.

மழை நீரை வெளியேற்றுவது 3 மடங்கு உயர்வு

இந்த அனைத்து கால்வாய்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள நவீன ரொபோடிக் மண்தோண்டும் இயந்திரம் மூலம் முறையான கால இடைவெளியில் தூர்வாரப்பட்டு ஆழம் மற்றும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த 30 கால்வாய்களின் நீரை வெளியேற்றும் அளவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நகர் முழுவதும் வெள்ளம் தேங்குதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து பருவமழையின் போது மழைநீர் வீணாகாமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், சாலையோரங்களில் உறை கிணறுகள் அமைத்தல், பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறுகளை கண்டறிந்து அவற்றிக்கு அருகாமையிலுள்ள தெருக்கள் மற்றும் வீடுகளிலிருந்து மழைநீர் சேகரிக்கும் வகையில் இணைப்புகள் ஏற்படுத்துதல், ஏரி குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி மறுசீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டதன் விளைவாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறைந்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கமிஷனர் கே.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *