தொண்டாமுத்தூர் அரசு கல்லூரிக்கு ரூ. 8 கோடியில் புதிய கட்டடம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்

கோவை.டிசம்பர்.2

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு   ரூ. 8 கோடியில்  புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 5.34 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில் அமையவுள்ள தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி புதிய கட்டடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு அரசு 50 ஆண்டு காலத்தில் இல்லாத வகையிலான வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். கோவை மாவட்ட மக்களின்  நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, கிராமத்து மாணவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றி வைத்துள்ளது என்றார்.  மேலும், கோவை ஆர்எஸ்புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும் தொடங்கப்பட்டு சரித்திர சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

கல்வி பயில்வதற்கு போதுமான சூழலை ஏற்படுத்திடும் வகையில் மேம்படுத்தப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள், அறிவியில் ஆய்வுக்கூடங்கள், கிராம நூலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளிலும் முதன்மை மாவட்டமாக கோவை திகழ்ந்து வருகின்றது என்றார்.

தனியார் கல்லூரிகளில் ரூ.35000 வரை செலுத்தக்கூடிய பட்டப்படிப்புகள் அனைத்தும் ஒரு பருவத்திற்கு அரசுக்கட்டணத்தில் ரூ.2000 மட்டுமே என்பதால் ஏழை எளிய மாணவ மாணவியர்களின் கல்வி வேட்கையினை ஆறுதல் மையங்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் விளங்குவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இரண்டாண்டுகளாக செயல்படும் தொண்டாமுத்தூர்,அரசு கல்லூரியில், 1080 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். ஆறு பாடப்பிரிவுகளின் கீழ் கல்வி பயிற்றுவிக்க 23 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தொண்டாமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டும் வரும் இக்கல்லூரியானது, தன்னிறைவுடன் செயல்பட 5.36 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பில், 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.இக்கட்டிடத்தில் முதல்வர் அறை, துறைத் தலைவர்கள் அறை, கல்லூரி அலுவலகம், நூலகம், பதிவறை, மாணவர் கூட்டுறவு அங்காடி, 12 வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள், உடற்கல்வி இயக்குநர் அலுவலகம் ஆகியவையும், அனைத்து தளங்களிலும் ஆண், பெண் இரு பாலருக்குமான கழிவறைகளும், 24மணி நேர சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சாய்வுதளம், மழைநீர் சேமிப்பு என அனைத்து வசதிகளுடன் இக்கட்டிடம் அமையப்பெறவுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *