உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் உள்நோக்கம் உள்ளது : மு.க.ஸ்டாலின்

 

புதுச்சேரி.டிசம்பர்.2

நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நிச்சயம் நடத்தாது என  திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல், இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார்.

நகர்புர உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தேதி, நிர்வாக காரணங்களுக்காக இன்று அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பழனிசாமி தெரிவித்தார்

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக தலைவர் ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்றார்.உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கோர வேண்டும். நீதிமன்றமும் அதற்கு தடை வழங்கிடும் என நினைத்துக்கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார். 

 தமிழகத்தில் முறையான மறு வரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தான் திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தேர்தலை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது போன்று ஒரு நாடகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி வருவதாக ஸ்டாலின்  தெரிவித்தார்.

நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நிச்சயம் நடத்தாது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதும் ஒரே கட்டமாக நடத்தப்படுவது தான் வழக்கம். ஆனால், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது உள்நோக்கம் இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *