சென்னை கோயம்பேட்டில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, நவம்பர்-29

சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை மற்றும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அவற்றை தொழிற்சாலைகள் மற்றும் வேறு உபயோகத்துக்கு பயன்படுத்துவது என முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த 2012-2013-ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை குடிநீா் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டா் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எதிா் சவ்வூடு பரவுதல் முறையில் மூன்றாம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு சுமாா் 60 கிலோ மீட்டா் நீளத்துக்கு குழாய்கள் பதித்து எடுத்துச் செல்லும் பணிக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தப் பணிகளுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ரூ.486 கோடிக்கு தயாரிக்கப்பட்டு அதிநவீன முறையில் 3-ம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்தின் தொடக்க விழா, அதன் வளாகத்தில் இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், துரைக்கண்ணு உள்ளிட்டோரும் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக, விழா மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் சென்னையில் சிப்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான பன்னாட்டு நிறுவனங்களைச் சோ்ந்த இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது அந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் நன்னீா் சென்னை மாநகர மக்களின் குடிநீா் பயன்பாட்டுக்காக திருப்பிவிடப்படும்.

மேலும் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் அமைந்துள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டங்களின் மூலம் சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவுக்கு மறுசுழற்சி செய்யப்படும். அதேவேளையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சென்னை குடிநீா் வாரியத்துக்கு தினமும் ரூ.29.25 லட்சம் வருவாய் கிடைக்கும் என அந்த வாரியத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *