உள்ளாட்சி தேர்தலுக்கு தடைகோரி மேலும் 6 புதிய மனுக்கள்

டெல்லி, நவம்பர்-29

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில், நேற்று, இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னர், தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பணிகளை நிறைவு செய்யாமல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தேர்தல் நடத்தக்கூடாது என்றும், அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகும்படி திமுக தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, புதிதாக உதயமான மாவட்டங்களில் இருந்து 6 பேர் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். புதிய மாவட்டங்களில், தொகுதி வரையறை செய்யாமல், தேர்தலை நடத்த கூடாது என உத்தரவிடுமாறு 6 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *