உதயமானது தமிழகத்தின் 37-வது மாவட்டம் செங்கல்பட்டு!!!

செங்கல்பட்டு, நவம்பர்-29

நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணை கடந்த 12ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன

செங்கல்பட்டு மாவட்டத்தின் பரப்பளவு 2 ஆயிரத்து 944 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 41 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்டதின் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு துணை முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனர்.  

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடக்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.  இவ்விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயா் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *