ஸ்டாலின் ஒரு வயது முதிர்ந்த குழந்தை-ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை, நவம்பர்-29

அரசியலில் மு.க.ஸ்டாலின் வயது முதிர்ந்த குழந்தை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஒன்றும் தெரியாத சின்ன குழந்தை போல ஸ்டாலின் இருப்பது வருத்தமளிக்கிறது. அரசியலில் அவர் குழந்தையாக இருக்கிறார். 60 வயதானவர்களை குழந்தை என்று சொல்வோம். அதுபோன்று ஸ்டாலினும் குழந்தையாகிவிட்டார் என நினைக்கிறேன்.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என பலமுறை முதல்வரும் உள்ளாட்சி துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். எனவே, திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என உறுதியாக சொல்லியிருக்கின்றனர்.

ஸ்டாலினை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தல் நடக்கக் கூடாது. அதற்கு எத்தனை வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளையும் ஸ்டாலின் கையாள்கிறார். நான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வந்தது இப்போது சரியாகிவிட்டது.

உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடக்காததற்கு ஸ்டாலின் தான் காரணம். ஸ்டாலின் எந்த வழியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சித்தாலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *