கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் – பொன்.மாணிக்கவேல்

சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது என ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை சென்னைக்கு கொண்டு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-13

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பாக 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.
ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்தபோது கூறியதாவது:

சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது. கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *