உத்தவ் தாக்கரே மத்திய அரசின் அடிமை அல்ல-சிவசேனா

மும்பை, நவம்பர்-29

மகாராஷ்டிராவில் இளைய சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்துள்ள அரசுக்குப் பிரதமர் மோடி கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும், அதற்குரிய பொறுப்பு இருக்கிறது என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தனது இளைய சகோதரர் என்று வர்ணித்தார். அந்த அடிப்படையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பிரதமர் மோடியை மூத்த சகோதரராகவும், உத்தவ் தாக்கரேவை இளைய சகோதரராகவும் வர்ணித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நம்முடைய பிரதமர் மோடி, தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா விரைவான பொருளாதார வளர்ச்சியையும், மேம்பாட்டையும் அடையும் என்று தெரிவித்துள்ளார்.

நிச்சயம் அந்த விரைவான மேம்பாட்டை மகாராஷ்டிரா மாநிலம் அடைவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் கவலைகளைப் போக்கும் வகையில் மத்திய அரசு தனது உதவிகளை வழங்க வேண்டும். மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா மற்றும் பாஜக இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே இடையே சகோதர ரீதியிலான உறவுகள் இருக்கிறது.

ஆதலால், மகாராஷ்டிராவில் உள்ள இளைய சகோதரர் உத்தவ் தாக்கரே அரசுக்கும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கும் பிரதமர் மோடி ஒத்துழைத்து செயல்படும் பொறுப்பு இருக்கிறது. பிரதமர் மோடி எந்த கட்சிக்கும் சார்ந்தவர் அல்ல, இந்த தேசத்துக்கே பொதுவானவர்.

ஆதலால், மகாராஷ்டிரா மக்கள் எடுத்துள்ள முடிவுக்கு மத்தியில் ஆளும் அரசு மதிப்பளித்து, எந்தவிதமான தொந்தரவும், இடையூறும் வழங்காமல் நிலையான அரசு செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.
சத்திரபதி சிவாஜியின் வீரம் முழுவதும் நிறைந்துள்ளது இந்த மராட்டிய மண். இந்த அரசு உருவாகிய மக்கள், டெல்லியுடன் போரிட்டுள்ளார்கள்.

தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதை உறுதியாக நம்புகிறோம். ஆனால் பாலசாஹேப் தாக்கரேவின் புதல்வரும் தற்போது மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா பக்கம்தான் இருப்பாரேத் தவிர, மத்திய அரசின் அடிமை அல்ல. ஆதலால், உறுதியாக மகாராஷ்டிராவில் உள்ள அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறது.

பாஜக முதல்வராக பட்னாவிஸ் இருந்தபோது, அவருடைய அரசில் ரூ.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. ஆதலால், முதல்வர் உத்தவ் தாக்கரே மிகுந்த கவனத்துடன், எச்சரிக்கையுடன் அதேசமயம், வேகமான நடவடிக்கைகளையும் எடுப்பார்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *