மராட்டிய முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!!!

மும்பை, நவம்பர்-28

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டது. இதனால் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்வர் விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது.

மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மூன்று கட்சி தலைவர்களும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அப்போது தங்களுக்கு 166 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அவர்கள் கடிதம் கொடுத்தனர்.

அதை ஏற்று புதிய அரசு அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுத்த கவர்னர், வருகிற டிசம்பர் 3-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார். கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து கூட்டணி அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளில் 3 கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவியேற்பு விழா இன்று மாலை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற விழாவில் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *