உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்!!!

சென்னை, நவம்பர்-28

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கான நடவடிக்கையில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. வாக்குச்சாவடிகளும், வாக்கு இயந்திரங்களும் தயார்நிலையில் உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட தேசிய கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய விவிபேட் மூலம் தேர்தல் நடத்த வேண்டும், மாநகராட்சி மேயர், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் சில கட்சி பிரதிநிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கப்பட்டது.

இதற்கிடையே டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாநகராட்சி மேயர், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கன இடஒதுக்கீடு குறித்த அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *