மராட்டியத்தில் அமையவிருக்கும் ஆட்சி சந்தர்ப்பவாத ஆட்சி-ஜி.கே.வாசன்

சென்னை, நவம்பர்-28

மகாராஷ்டிர மாநிலத்தில் அமையவிருக்கும் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.28) வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிர மாநிலத்திலே இன்று அமையவிருக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம். முதல்வர் பதவிக்காக சிவசேனா கட்சி, காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தங்களுடைய மொத்த வடிவத்தையும் இழந்திருக்கிறார்கள்.

மேலும், காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்காக ஆசைப்பட்டு, தங்களுடைய கொள்கைகளை காத்தாடி போல பறக்கவிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அளவிலே சிறுபான்மை மக்களுடைய நம்பகத்தன்மையை இழந்திருக்கிறார்கள்.

அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுடனும் பேசி, சிவசேனா கட்சியோடும் பேசி தங்களுடைய பதவியை உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஆட்சி மகாராஷ்டிர மாநில மக்களால் விரும்பி வாக்களித்த கூட்டணி ஆட்சியும் அல்ல. சந்தர்ப்பவாத ஆட்சியாகவே அமைந்திருக்கிறது.

மாநில வளர்ச்சிக்காக மக்கள் அளித்த வாக்குக்கு எதிராக இன்றைக்கு அமைந்திருக்கும் கூட்டணி ஆட்சி பரிசோதனைக் களமாக அமைந்திருப்பது வேதனையான ஒன்று. குறிப்பாக மக்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் கொள்கைகளைத் தாரை வார்த்துக் கொடுத்து பதவி சுகத்துக்காக ஒன்று சேர்ந்து இன்றைக்கு மகாராஷ்டிராவில் பயனற்ற ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளே ஆட்சியினுடைய நிலையற்ற தன்மையை விரைவில் நிரூபிக்கும்.

பாஜக எதிர்க்கட்சியாக தனிப்பெரும் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலில் அவர்களை நம்பி எடுத்த முடிவு ஏற்புடையதல்ல. மொத்தத்தில் மகாராஷ்டிர மாநில மக்கள் வாக்களித்ததற்கு மாறாக இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில் ஒரு சந்தர்ப்பவாத, பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ஆட்சி அமர்ந்திருக்கிறது. இதன் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியதாகவே இருக்கிறது.

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மகாராஷ்டிர மாநில மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் நன்மை நடக்க வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்” என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *