மாவட்டங்களை பிரிப்பதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தமில்லை-பழனிசாமி

திருப்பத்தூர், நவம்பர்-28

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு என்றார். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவியது அதிமுக அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், சுயஉதவிக் குழுக்கள் தொடர்பாக ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *