உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை, நவம்பர்-27

மராட்டிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மராட்டியத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாதி தலைவரான உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சிகள் நாளை மாலை 6.40 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *