பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-13

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன் சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து சுபாஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரத்திலும் அ.தி.மு.க. ‘பேனர்’கள் வைக்கப்பட்டு இருந்தன.

சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார். அப்போது சுபஸ்ரீக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி ஓட்டுனர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் என பொதுவாக குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான, பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கிறது. விதிகளை மீறி பேனர்கள் வைப்பது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரசியலாக்கப்படுகின்றன. உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத்தொகை தந்தால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறார்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தலைமை செயலகத்தை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை தவிர மற்ற அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் எத்தனையோ உத்தரவுகளை பிறப்பித்த பிறகும் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாகவே உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். அதிகாரிகள் ரத்தம் உறிஞ்சுபவர்களாகவே இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *