பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டா, நவம்பர்-27

புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவ கார்டோசாட்-3 செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட், காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.திட்டமிட்டபடி, புவிசுற்றுவட்டப் பாதையில், கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை ஏவுவதற்கான 26 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று மிகச்சரியாக காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 உட்பட 14 துணை செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் பாய்ந்து சென்றது.

புவி ஆய்வுகளுக்கு உதவுவதற்காக, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட “கார்டோசாட்” என்று அழைக்கப்படும் செயற்கைகோள்களை கடந்த 2005ம் ஆண்டு முதல், இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்டோசாட் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், 9வது செயற்கைக்கோளாக கார்டோசாட் – 3 எனும் தொலை உணர்வு செயற்கைகோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆயிரத்து 625 கிலோ எடையிலான கார்டோசாட்-3 செயற்கைகோள், தரையிலிருந்து, 509 கிலோ மீட்டர் தொலைவில் புவிசுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர்.

5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த கார்டோசாட்-3 செயற்கைகோள் வானில் மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.

இது, நிலவளம், கடற்பகுதிகள் உள்ளிட்ட புவி ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏவப்படும் PSLV ராக்கெட் இஸ்ரோ ஏவும் 49வது பிஎஸ்எல்வி வகை ராக்கெட் என்பதும், திறன் கூட்டப்பட்ட 21வது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *