மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!!!

மும்பை, நவம்பர்-27

மகாராஷ்டிராவின் 14-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியதை தொடர்ந்து எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆகியோர் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆதரவோடு பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார்.

பெரும்பான்மை இல்லாத அஜித் பவார் ஆதரவோடு எவ்வாறு ஆட்சி அமைக்க பட்னாவிஸை ஆளுநர் அழைத்தார் என்றும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியும் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மாலை 5 மணிக்குள் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க வைத்து, பெரும்பான்மையை பட்னாவிஸ் நிரூபிக்க வேண்டும். இதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் கோஷ்யாரி அழைப்பின் பேரில் நாளை உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 14-வது சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. முன்னதாக, அவையில் மூத்த எல்எல்ஏவாக பாஜகவின் காளிதாஸ் கோலம்பர் தற்காலிக சபாநாயகராகப் பதவி ஏற்றார். அவர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவைக்கு வந்த அஜித் பவாரை, அவரின் சகோதரியும், என்சிபி எம்.பி.யுமான சுப்ரியா சுலே கட்டித்தழுவி வரவேற்று அழைத்துச் சென்றார்.

என்சிபி மூத்த தலைவர்கள் அஜித் பவார், சாகன் பூஜ்பால், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பிரிதிவிராஜ், முன்னாள் சபாநாயகர் வால்சே பாட்டீல், பாஜகவின் ஹரிபாகு பாகடே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் முதலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அஜித் பவார் பதவி ஏற்று முடித்தபின் அனைத்து என்சிபி தலைவர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

சட்டப்பேரவைக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே நீண்ட நேரத்துக்குப் பின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 288 எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *