தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகல்!!!

மும்பை, நவம்பர்-26

நாளை மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி சிவசேனா, என்.சி.பி., காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில் நாளை (அக்.27) மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், வாக்கெடுப்பை நேரலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித்பவார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அஜித் பவார் அவருடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த திருப்பமாக, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர், துணை முதல்வர் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  அதுமட்டுமில்லாமல், பதவியேற்ற நான்கே நாட்களில் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *