உரிமைப்போராளி இம்மானுவேல் சேகரன்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கடைசி வரை போராடி தன்னுயிரை நீத்தவர் இம்மானுவேல் சேகரன். ராமநாதபுரம்,மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி, அவர்கள் சமூக அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் இம்மானுவேல் சேகரன்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் கடந்த 1924 அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி ஆசிரியர் வேதநாயகம் ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். பரமக்குடியில் உள்ள சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், உயர்நிலைக் கல்வியை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். இம்மானுவேல் சேகரன் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால், அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தனது 19 வயதில் இரட்டை குவளை முறைக்கு எதிரான மாநாட்டையும்,தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டு மாநாடு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட முயன்றவர்.
1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். பின்னர் சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.
1946 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியை இம்மானுவேல் சேகரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்த இமானுவேல் சேகரன், உரிமைகளை பெறுவதற்காக ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அவரது வளர்ச்சியை கண்ட அப்போதைய முதலமைச்சர் காமராஜர்,இம்மானுவேலை சந்தித்து பேசியதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இம்மானுவேல் சேகரன் இணைந்தார்
1957-ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படக் கூடிய ஒரு சூழல் உருவானது. காங்கிரஸ்-பார்வர்டு பிளாக் கட்சிகளிடையேயான அரசியல் மோதல் சாதிக் கலவரமாக மாறும் சூழல் ஏற்பட்டது. அதுபோன்ற கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பணிக்கர் தலைமையில் ஒரு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் இம்மானுவேல் சேகரன் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் முத்துராமலிங்கத் தேவரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ணத் தேவரும், நாடார் சமூக மக்கள் சார்பில் வேலுச்சாமி நாடாரும் லந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இமானுவேல் சேகரனுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் தடித்த வாக்குவாதங்கள் நடைபெற்றதாக பல்வேறு நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மறுநாள் செப்டம்பர் 11 காலை பாரதி விழா ஒன்றில் பேசவேண்டியிருப்பதாகச் சொல்லிக் கிளம்பினார் இமானுவேல் சேகரன். அன்று இரவுதான் இமானுவேல் சேகரன் ஒரு கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் தேவர் சமுதாயத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அந்தக் குற்றசாட்டிலிருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக கடைசி வினாடி வரை போராடிய இம்மானுவேல் சேகரன் இன்று தேவேந்திர குல மக்களின் மிகப்பெரிய தலைவராக உயர்த்தப்பட்டு போற்றப்படுகிறார்.