மாநகராட்சியாக தரம் உயருகிறது தாம்பரம்!!!

சென்னை, நவம்பர்-25

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஓசூர், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக நகராட்சிகளான தாம்பரம், பல்லாவரம், ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி, ஆவடியை கடந்த ஜூன் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

தற்போது தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த பரிந்துரையும் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

மாநகராட்சியாக உயரும் பட்சத்தில் குடிநீர், கழிவுநீர், மின்சாரம், சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், செம்பாக்கம் ஆகிய 2 நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன் கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய 4 பேரூராட்சிகளும் இடம் பெறும். மேடவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்பட 7 கிராம பஞ்சாயத்துகளும் இடம் பெறும் என தெரிகிறது.

விரைவில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக, சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் உலகத் தரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் நவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *