2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவம்பர்-25

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும், அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றார். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் கூறினார். வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் 16 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் 30 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 18 செ.மீ. மழையும், புதுவையில் 34 செ.மீ பெய்ய வேண்டிய நிலையில், 13 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *