ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம், சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கடலூர், நவம்பர்-25

கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்.

கடலூரில் பிறந்த ராமசாமி படையாச்சியார் இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும், காமராஜர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.  

ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த ஜூலை மாதம் அவரது உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் திறந்துவைத்தார். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

அதனருகே அவரின் வெண்கலச் சிலையும் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.

விழாவில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு மற்றும் ராமசாமி படையாச்சியாரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *