மராட்டிய அரசியல் விவகாரம்:நாடாளுமன்றம் முடக்கம்

டெல்லி.நவம்பர்.25

மராட்டிய அரசியல் விவகாரத்தில் பா.ஜ.க.வின்    செயல்பாட்டை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அமளியால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்   செவ்வாய்க் கிழமை 2.மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 மராட்டிய சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தேர்தலை கூட்டாகச் சந்தித்த பாஜக, சிவசேனா கட்சிகளிடையே ஆட்சி அமைப்பது மற்றும் முதலமைச்சர் பதவி தொடர்பாக   தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு  இறுதியில் கூட்டணி முறிந்தது.

 இதனையடுத்து கடந்த 23ந் தேதி  அதிரடி அரசியல் திருப்பமாக தேசியாவாத காங்கிரஸ் கட்சியின்  ஆதரவுடன்  பாஜக  ஆட்சி அமைத்தது. பாஜகவின் தேவந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார்  துணை முதல்வரானார்.  இதனால் அதிருப்தி  அடைந்த சரத்பவார் தனது கட்சி பாஜகவை ஒருபோதும் ஆதரிக்காது என்று அறிவித்தார்.  இதனையடுத்து சிவசேனா,தேசியவாதகாங்கிரஸ்,காங்கிரஸ்  கட்சித் தலைவர்கள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இது தொடர்பான விசாரணையில் நாளை  தீர்ப்பு  வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில்,மக்களவை இன்று கூடியதும், ​​காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மராட்டிய அரசியல் விவகாரத்தில் பாஜக  செயல்பாட்டை கண்டித்து   கோஷங்களை எழுப்பினர்.  சபாநாயகர் ஓம் பிர்லாவின்  இருக்கை முன்பு சென்று முழக்கமிட்டனர். மேலும் பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏந்தியவாறு  எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டது, மக்களவை முதலில் மதியம் 12 மணி வரை, பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர்  செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணி வரை  மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

மாநிலங்களவையிலும்  இதே பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தை வழங்கியிருந்தனர். ஆனால் இந்த பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முடியாது என்று கூறி அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு  அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இடங்களிலிருந்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.   இதனையடுத்து அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாளை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *