சிவசேனா, என்.சி.பி., காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கடிதம்

மும்பை, நவம்பர்-25

மகாராஷ்டிரா ஆளுநரை சந்திக்கச் சென்ற, 3 கட்சிகள் கூட்டணியின் பிரதிநிதிகள், ஆளுநர் அலுவலகத்தில், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கினர்.

மகாராஷ்டிராவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி ஆட்சியமைக்கும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், கடந்த சனிக்கிழமையன்று காலை, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இதை எதிர்த்து, 3 கட்சிகள் கூட்டணியான, மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி, உச்சநீதிமன்றத்தை நாடியது.

இந்நிலையில், 3 கட்சிகளின் பிரதிநிதிகள், இன்று காலை 10.30 மணியளவில், மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தனர். அங்கு, ஆளுநர் மாளிகை அதிகாரிகளை சந்தித்த 3 கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்கினர்.

இதனிடையே, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியால், பாஜக முகாமுக்கு தாவிய அஜித் பவாருக்கு, சுழற்சி முறையில், முதலமைச்சர் பதவியை வழங்க சிவசேனா ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் எந்நேரத்திலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *