நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. திணரும்-சரத்பவார்

மும்பை, நவம்பர்-23

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அப்போது அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர்.

இதுகுறித்து சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முடிவு தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல. இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. அவரின் முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ள அஜித் பவார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடியால் அஜித் பவார் இந்த முடிவு எடுத்தாரா என்பது தெரியாது. அவருக்கு பதில் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். சிவசேனா தலைமையில் அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் முடிவில் மாற்றமில்லை. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தருவது என்ற எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம்’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *