இது அரசியல் ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

மும்பை, நவம்பர்-23

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அப்போது அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர்.

அப்போது உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘மகாராஷ்டிராவில் தற்போது நடந்துள்ளது அரசியல் துல்லியத் தாக்குதல். அரசியலமைப்பு சட்டம் மற்றும் மகாராஷ்டிரா மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதற்கு மகாராஷ்டிர மக்கள் பழிக்கு பழி தீர்ப்பார்கள். சிவசேனா எம்எல்ஏக்களை பிளவுபடுத்தினால் மகாராஷ்டிரா தூக்கத்தை இழந்து விடும். சரத் பவாரும், நானும் இணைந்து செயல்படுவோம்.

மகாராஷ்டிர அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் வராது என்று நம்பலாம். சிலர் பெவிக்கால் (பட்னாவிஸ்) போல் முதல்வர் இருக்கையில் ஒட்டிக்கொள்ளவே விரும்புகின்றனர். இந்த அரசியல் விளையாட்டை பாஜகதான் ஆடி வருகிறது.

இதற்கு முன்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் விளையாட்டு நடந்தது. இப்போது இந்த விளையாட்டை தொடங்கி இருக்கிறார்கள். இனி தேர்தல்கள் எல்லாம் அவசியமே இல்லை என்று நான் கருதுகிறேன்.

வஞ்சிக்கப்பட்டு, முதுகில் குத்த முயன்றபோது மாமன்னர் சத்ரபதி சிவாஜி என்ன செய்தார்? என்பது எல்லோருக்கும் தெரியும். தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றது மகாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் இங்குள்ள மக்களின் மீதும் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’. இதற்கு மக்கள் தகுந்த முறையில் பழி தீர்ப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *