முதுகில் குத்தி விட்டார் அஜித் பவார்-சஞ்சய் ராவத்

மும்பை, நவம்பர்-23

பாஜகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்தி விட்டதாக சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தும், முதலமைச்சர் பதவி போட்டியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது.

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று காலை பொறுப்பேற்றது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைத்தோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் என சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.

அஜித் பவாரின் இந்த முடிவுக்கும், அக்கட்சி தலைவர் சரத் பவாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து இன்று மதியம் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளிக்க உள்ளனர். அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களும் மகாராஷ்டிரா மக்களை மட்டுமன்றி மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியையும் அவமானப்படுத்திவிட்டார்கள்’ என ராவத் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *