மராட்டியத்தில் திடீர் திருப்பம்: முதல்வராக பட்னாவிஸ் மீண்டும் பதவியேற்பு

மும்பை, நவம்பர்-23

மகராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

மகாராஷ்டிர சட்டபேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும், தனிப்பெரும்பான்மைக்கு கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், முதலமைச்சர் பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் கூட்டணி முறிந்தது. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் யாரும் ஆட்சியமைக்க வராததால் ஆளுநரின் பரிந்துரையின் பேரில் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் உதவியை சிவசேனா நாடியது. இதுதொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வந்தன. முடிவில், மகாராஷ்டிரத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியானது. நேற்று இரவு மும்பை ஓர்லி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் அரசுக்கு உத்தவ் தாக்கரே தலைமையேற்பார் எனக் கூறினார்.

மேலும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலை பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மருமகன் அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *