இந்திரலோக அரியணையை கொடுத்தாலும் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை-சஞ்சய் ராவத்

மும்பை, நவம்பர்-22

இந்திரலோக அரியணையை பாஜக அளிக்கிறேன் என்று கூறினால்கூட இனிமேல் அவர்கள் பக்கம் சிவசேனா செல்லாது. அவர்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பையில் மாலை 4 மணிக்கு மேல் மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றன.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. 5 ஆண்டுகள் முழுமையாக சிவசேனா சார்பில் ஒருவர் முதல்வர் பதவியில் இருப்பார். இது குறித்து காங்கிரஸ், என்சிபி கட்சித் தலைமையுடன் பேசி முடிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மக்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார். முதல்வர் பதவியை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள பாஜக தற்போது சம்மதம் தெரிவித்து சிவசேனாவை அணுகினால் உங்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராவத் கூறுகையில், “பாஜகவுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இனிமேல் இந்திரலோகத்தில், கடவுள் தேவேந்திரனின் அரியசானத்தை அளிக்கிறோம் என பாஜக கூறினாலும் அவர்களிடம் செல்லமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *