முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

டெல்லி.நவம்பர்.21

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மக்களவையில் ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது  கேரள மாநிலம் இடுக்கி  தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும், அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாகவே உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றார். 

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பும், பின்பும் அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பாதுகாப்புத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அணையில் மேற்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  அவர் கூறினார். இது குறித்த விவாதத்தில்  பேசிய திமுக உறுப்பினர் ஆ.ராசா,   ஜல்சக்தி  துறை அமைச்சர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.  ஆனால் மத்திய சுற்றுச் சூழல் துறை மற்றும் வனத்துறை அமைச்சகம் திட்ட அறிக்கை தயாரிப்பதை தாமதப்படுத்துவதேன் என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள இரண்டு துறைகளுக்குள்  மாறுபட்ட கருத்து நிலவுவது ஏன் என்று ராசா வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *