விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – இஸ்ரோ
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு, செப்-10

நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்த லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ., தொலைவில் இருந்த போது, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனையடுத்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. ஆனாலும், லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கண்டறியப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை சந்திரயான் – 2ன் ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடித்தாலும், இதுவரை தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.