மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக, திமுக கொண்டாட்டம்-கூட்டணி கட்சிகள் திண்டாட்டம்

              

சென்னை.நவம்பர்.21

மாநகராட்சி மேயர்,நகர்மன்றத் தலைவர்,பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து  மறைமுக  தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  

இதன் மூலம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில்  15 மாநகராட்சிகள்,121 நகராட்சிகள்,528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மேயர்,உள்ளிட்ட மொத்தமுள்ள 664 பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்வு   செய்யும் நடைமுறைக்கு  பதிலாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மூலம்  மறைமுக தேர்தல் முறைக்கு வகை செய்யப்பட்டுள்ளது.

 திமுக,அதிமுக என இரண்டு கட்சிகளும்  ஆட்சிக்கு வரும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் செய்வது வாடடிக்கையாக உள்ளது. 1996 –ம் ஆண்டு மேயர்,நகர்மன்ற மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே வாக்களித்து தேர்வுசெய்தனர். அதே ஆண்டுதான் திமுக சார்பில் சென்னை நகர மேயராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து  2001-ம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் இதே நடைமுறையில்தான் தேர்தல் நடைபெற்றது.  பின்னர் 2006 ல்  மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஆட்சி அமைத்த அதிமுக அரசு, மேயரை மக்களே  நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறையை  அமல்படுத்தியது. 2016-ம் ஆண்டில்  உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில்  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்  பதவிகளை  கவுன்சிலர்கள்  தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் செய்தது. இதனை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாடி தடைபெற்றது. இதனையடுத்து 2018 ல் மறுபடியும் நேரடி தேர்தல் நடத்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மறைமுக  தேர்தலுக்கான அவசர சட்டத்தை  ஆளுநரின் ஒப்புதலுடன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்  எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  ஏற்கனவே இருந்த நடைமுறைதான் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என அதிமுக தரப்பில்  விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க, அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்   மறைமுக தேர்தல் முடிவால் கலக்கம் அடைந்துள்ளன.  ஆளும்  அதிமுக மற்றும் திமுக அனைத்து மட்டத்திலும் வலுவான கட்டமைப்பு கொண்டுள்ள கட்சிகள் ஆகும். அத்துடன் பி விட்டமினை கொடுத்து  போட்டி, போட்டு  பதவிகளை கைப்பற்றவும் இரண்டு கட்சிகளும் தயராகவே உள்ளன.

அதிமுக, திமுக தலைமையில்  தொகுதி பங்கீடு  செய்து கொண்டு  போட்டியிட்டாலும்,  கவுன்சிலர்களை அந்த கட்சிகள் விலைக்கு வாங்கிவிடும் என்ற  கலக்கத்தில்  கூட்டணி கட்சிகள்  உள்ளன.

ஏற்கனவே மாவட்ட ஊராட்சித்  தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்காக  அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே வெற்றி பெற்ற கூட்டணி மற்றும் மாற்று அணி கவுன்சிலர்களை கூட கடத்தி வைத்தும், விலைக்கு வாங்கியும் பதவிகளை பிடித்த கடந்த கால கசப்பான நிகழ்வுகளால், கூட்டணி கட்சிகள் அச்சமடைந்துள்ளன.

இந்த நிலையில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக ஆளுங்கட்சி பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிலை நாட்ட ஆயத்தமாக உள்ளது.

அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் திமுகவும் ஆள் இழுப்பு, பேரம்பேசுதல் உள்ளிட்ட சகல வேலைகளையும் செய்யும் என்பதால் இருதரப்பு கூட்டணி கட்சிகளுமே உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளன.

அதிமுக மற்றும் திமுக எதிர் எதிர் கட்சிகளாக இருந்தாலும் உள்ளாட்சி அமைப்பில் மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பிடிப்பது மற்றும் இரண்டாம் கட்டத்தில் உள்ள கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் ஒத்த கருத்துடனே செயல்படுவதாக கூட்டணி கட்சிகள் புலம்புகின்றன.

மொத்தத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க, தேமுதிக, திமுக அணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக மற்றும் வி.சி.க கட்சி தலைமைகளை  மறைமுக தேர்தல் முறை பெரிதும்  கலக்கமடைய செய்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *