மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: தமிழக அரசு

சென்னை, நவம்பர்-20

மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்கிழமையன்று அமைச்சரவை கூடியது. இதில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாநகர மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மறைமுக தேர்தலா என்பதை தமிழக உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், மாநகர மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மேயர், நகர் மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

மறைமுக தேர்தல் குறித்த அறிவிப்புக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், கவுன்சிலர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கும் சூழலில் நிர்வாகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் நிலையான உள்ளாட்சி அமைப்பை உருவாக்கும். மறைமுக தேர்தலால் சென்னை, கோவை, மதுரை போன்ற அதிக கவுன்சிலர்கள் கொண்ட இடங்களில் சுமூகமாக பணியாற்ற வகை செய்வதோடு, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *