ரஜினி – கமல் திடீர் அரசியல் கூட்டணி, இயக்குவது யார் ?

சென்னை.நவம்பர்.20

தமிழக மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற ரஜினி,கமல்  ஆகியோரின்  திடீர் கூட்டணியின் பின்னணியில் பிரபல அரசியல்  விமர்சகர் ஒருவர் இருப்பதாக    கூறப்படுகிறது.

கமல் ரஜினி கூட்டணி குறித்த  பேச்சுகள்  ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரத்திலும்  பரபரப்பு  செய்தியாக உள்ளது.

அரசியல் களத்தில் ரஜினி

திரையுலகில் கமலுடன் அபூர்வ ராகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்   அறிமுக நடிகராக நடித்த ரஜினி, அதன் பின்னர் 16 வயதினிலே,ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தன்ர். பின்னர்  இருவரும் தனித்தனியாக  நடிக்க முடிவு செய்து  தத்தம் பாணியில் வெற்றிப் படங்களை கொடுத்தனர். இருவரும்   இயக்குநர் பாலச்சந்தரின்  அறிமுகங்கள் என்பதால்  இவர்களுடைய நட்பு என்பது 44 ஆண்டுகளாக தொடர்கிறது.  எனினும் இருவருடைய ரசிகர்களும் எதிர் எதிர் துருவங்களாகவே   இதுவரை செயல்பட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த   மன்னன் திரைப்படம் அவரது அரசியலுக்கான முன்னோட்டமாக  பார்க்கப்பட்டது. அதில்  கதாநாயகியா நடித்த விஜயசாந்தியின் பாத்திரம்  ஜெயலலிதாவை  மறைமுகமாக தாக்குவது போன்று உள்ளதாக கூறப்பட்டது.  இதனைத் தொடர்ந்து  அண்ணாமலை,பாட்சா,படையப்பா, பாபா, கபாலி, பேட்ட வரை அவ்வப்போது  அவர் பேசி நடித்த  பஞ்ச் வசனங்கள் அவருடைய  அரசியல் பிரவேசத்திற்கான  அடித்தளமாக கருதப்பட்டது.  

ஜெயலலிதா மீது ஏற்பட்ட மோதலால் 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக, த.மா.கா கட்சிக்கு  ரஜினி ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்கிற முழக்கத்தையும் ரஜினிகாந்த் முன்வைத்தார் இதனால், அதிமுக தேர்தலில் சந்தித்த தோல்வி ரஜினியின் வெற்றியாக கருதப்பட்டது.

1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தார் அப்போது தமிழக மக்கள் ரஜினியை நிராகரித்துவிட்டனர். இதன்பின்னர் புகை பிடிப்பது தொடர்பான காட்சி  பாபா திரைப்படத்தில்  இடம்பெற்ற விவகாரத்தில் ராமதாசுடன் மோதல் ஏற்பட்டு 2004 மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு   எதிரான நிலைப்பாட்டை  ரஜினி எடுத்தார் அதுவும் தோல்வியைத்தான் தந்தது. இந்த நிலையில் 2017 டிசம்பரில் தனது  65 வது பிறந்த நாளில் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். ஆனாலும் அவர் கட்சி  தொடங்குவது புலிவருது கதையாகவே தொடர்கிறது. இதனிடையே பாஜக வில் ரஜினி இணைந்து செயல்படுவார் என்ற கருத்து நிலவி வந்த வேளையில்  அண்மையில் அதற்கு ரஜினி முற்றுபுள்ளி வைத்தார்.

கமலின் அரசியல் மய்யம்

இந்நிலையில் கமல், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை பிப்ரவரி 2018 ல் தொடங்கினார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி சார்பில்  வேட்பாளர்களை நிறுத்தினார். இதில்  கணிசமான வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5 சதவீத வாக்குகள் கிடைத்தது.

ரஜினி கமலுக்கு அரசியல் ஆலோசனை

 இதனிடையே  ரஜினி,பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஏற்றார் போல் ரஜினி கமல் ஆகிய இருவருடைய செயல்பாடுகளும் பேட்டியும் அமைந்துள்ளன.  ரஜினி தனது பேட்டியில் தமிழகத்தில் தலைமைப் பதவி வெற்றிடமாக உள்ளதாக கூறினார்.  இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல், ரஜினி  இருவரையும்  அமைச்சர்கள் சாடினர்.

 இந்த  சூழலில் அரசியலில் ரஜினியும் கமலும் இணையும் அதிசயம் நடக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த கமல், “அதில் அதிசயம் எதுவுமில்லை. ஏற்கெனவே 44 ஆண்டுகள் திரைத்துறையில் சேர்ந்துதான் பயணித்திருக்கிறோம்” என்றார். அதற்கு, `திரைத்துறையில் மட்டுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. “தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம். கொள்கைகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது” என்றார்.

இந்த நிலையில், கோவாவில் தேசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி, “தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்று கூறினார். `

ரஜினி கமல் ஆகிய இருவரின் பேச்சுக்கு என்ன காரணம், இதன் பின்னணி என்ன என்று ஆய்ந்து பார்க்கும்  போது,  அரசியல் விமர்சகர் ஒருவரின் ஆலோசனை படிதான்  இருவருடைய இந்த கூட்டணிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த அரசியல் விமர்சகர் நடிகர் விஜயையும் சந்தித்து முக்கிய ஆலோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு எதிராக மூன்று நடிகர்களையும் கொம்பு சீவிவிடும் வேலையில் அந்த அரசியல் விமர்சகர் இறங்கியிருப்பதாவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *