உள்ளாட்சி தேர்தலில் குட்டையை குழப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை, நவம்பர்-20

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை டிசம்பர் மாதம் 13ந் தேதிக்குள் வெளியட வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது, வேட்பாளர்கள் தேர்வு, வியூகங்கள் அமைப்பது போன்ற முக்கிய வேலைகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுடன் உள்ளாட்சி பதவிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தேமுதிக, த.மா.கா.,  புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில், அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சிகளாக பா.ம.க., பா.ஜ.க., தேமுதிக ஆகியவை உள்ளன.  உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகர்மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று தங்களது கட்டமைப்பை வலுப்படுத்த கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக, வடமாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ள கட்சியாக கருதப்படும் பா.ம.க. மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளில் 25 விழுக்காடு பிரதிநிதித்துவம் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான பா.ஜ.க. நாகர்கோவில், வேலூர், கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர் சீட்டுகளை அதிமுகவிடம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் முக்கிய பதவிகளில் தங்கள் கட்சி போட்டியிடவேண்டும் என பா.ஜ.க. விருப்பமும் தெரிவித்து வருகிறது.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்குரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மாநில காங்கிரசும் தஞ்சாவூர் மாநகராட்சியை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று முனைப்பு காட்டி வருகிறது.

ஜெயலலிதா காலத்தில் பெரும்பாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கே உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பெரும்பாலான அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு மட்டும் அதிமுக சார்பில் 25-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படிபட்ட சூழலில், தொகுதிகளை எவ்வாறு பிரித்துகொடுப்பது என அதிமுக தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்த கேட்கும் தொகுதிகளை அதிமுக தலைமை கொடுத்துவிட்டால் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே முனுமுனுப்பு எழ வாய்ப்புளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அதிமுகவுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என அதிமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக, ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு வேளை இதுதான் அதிமுகவின் முடிவா? என கூட்டணிகள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *