தேவைப்பட்டால் நிச்சயம் நானும், ரஜினியும் இணைவோம்-கமல் உறுதி

சென்னை, நவம்பர்-20

நானும், ரஜினியும் நட்பைவிட தமிழக நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம், தமிழகத்திற்காக உழைப்போம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.

திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். அவரின் நீண்டகால நண்பரும் சக நடிகருமான ரஜினி, விரைவில் கட்சி தொடங்க இருப்பதாக கூறி வருகிறார். சமீபத்தில் நடந்த பல நிகழ்வுகளில் இருவரும் இணைந்து செயலாற்றுவது குறித்து பல்வேறு விதமாக கூறிவந்தனர்.

இந்நிலையில், நேற்று (நவ.19) சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, ரஜினியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் இருவரும் இணைவோம், என்றார். அதேபோல், ரஜினியும், ”தமிழக மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்”, என்றார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது:
எனக்கும், ரஜினிக்கும் இடையேயான 44 ஆண்டு நட்பை விட, தமிழகத்தின் நன்மை தான் முக்கியம். நாங்கள் இணைவது என்பது நட்பை விட முக்கியமான செய்தி. அந்த செய்தி என்னவெனில், தமிழக நலனுக்காக தேவைப்பட்டால், சேர்ந்து உழைப்போம் என்பது தான். என்னுடைய பணியை நான் செயலில் காட்டுவேன். இவ்வாறு கமல் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *