ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை சட்டதிருத்த மசோதா : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

டெல்லி.நவம்பர்.19

 ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு சின்னத்தை நிர்வகிக்கும்  அறக்கட்டளை  சட்ட திருத்த  மசோதா மாநிலங்களவையில்  இன்று நிறைவேறியது.

1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலா பாக்கில் ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில், துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே துயரத்தில் ஆழ்த்திய  இந்த சம்பவத்தின் நினைவாக , ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவுச் சட்டம், 1951ல் கொண்டுவரப்பட்டது. இந்த நினைவு சின்னத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் இருக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர், கலாச்சாரத் துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பஞ்சாப் ஆளுநர், பஞ்சாப் முதலமைச்சர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவர். உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச்  சின்னத்தை நிர்வகிக்கும் சட்ட திருத்த  மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மசோதா மீதான விவவாதம் மக்களவையில் நடைபெற்றது. ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட அறக்கட்டளை அறங்காவலராக இருந்து வரும் காங்கிரஸ் தலைவரை நீக்கும் வகையில்  இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நீண்ட விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 214 வாக்குகளும், எதிராக 30 வாக்குகளும் பதிவாகியதால், மசோதா நிறைவேறியது.இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த சட்டதிருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. குளிர் கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேறியது. முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா இந்த மசோதாவை ஆட்சேபித்தார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுக்கு ஒரு வரலாறு இருப்பதாகவும், அதன் தலைவரை அறங்காவலராக நீக்குவது ஆட்சேபனைக்குரியது என்றும் அவர் கூறினார். இந்த மசோதாவை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தியாகி உத்தம் சிங்கின் நினைவிடத்தை புதுப்பிக்குமாறு திரிணாமல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் வேண்டுகோள் விடுத்தார், மேலும் ஜலியாவாலா பாக் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை பராமரிக்க முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

விவாதத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் ராம்கோபால் யாதவ், ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்தில் தியாகிகளின் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சி.பி.ஐ.எம் உறுப்பினர், கே.கே. ராகேஷ் திமுக உறுப்பினர் வின் திருச்சி சிவா இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *