ஸ்டாலின் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு பரப்புகிறார்கள்-ஆர்.எஸ்.பாரதி

சென்னை, நவம்பர்-19

மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் ஆஜரான பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

இதற்கிடையே, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக, முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய அலுவலகத்தில் முரசொலி அறங்காவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணையின்போது, தலைமை செயலாளர் சண்முகமும் ஆஜராகினார். அது போல் புகார் மனு அளித்த சீனிவாசனும் ஆஜரானார்.

ஆணையத்தில் ஆஜரான பிறகு ஆர்.எஸ். பாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர். முரசொலி நில விவகாரத்தில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தலையிட உரிமை இல்லை. முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் புகார் தந்த சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. தலைமைச் செயலாளர் சண்முகமும், புகார் தந்த சீனிவாசனும் ஆணையத்திடம் அவகாசம் கேட்டு உள்ளனர் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *