சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னை.நவம்பர்.19

 மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்துள்ளார்.

 சென்னையில் செய்தியாளர்களிடம்   பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, உள்ளாட்சிகளில் சொத்து வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலர் தலைமையில்  குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த குழு மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும் வரை, பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும். சொத்து உரிமையாளர்கள் சொத்துவரி சீராய்வுக்கு முந்தைய 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும். 

உயர்த்தப்பட்ட விகிதத்தின்படி சொத்து வரி செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகையானது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். 1998-க்குப் பிறகு மாநகராட்சி மற்றும் நகாட்சிகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை.

சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *