உள்ளாட்சித் தேர்தலில் 3 மாநகராட்சிகளை குறிவைக்கும் பா.ம.க

சென்னை.நவம்பர்.19

அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க உள்ளாட்சித்தேர்தலில்  வேலூர்,ஆவடி.ஓசூர் ஆகிய மாநகராட்சிகளை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13 ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்  என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே ஆளுங்கட்சியான அதிமுக தலைமை, விக்கிரவாண்டி,நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிப்பெற்ற  உற்சாகத்தில் உள்ளாட்சி  பதவிகளுக்கான விருப்பு மனுக்களை பெற்று வருகிறது. எதிர்கட்சியான திமுக வும்  உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பு மனுக்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில்   உள்ள, பா.ம.க,பாஜக,தேமுதிக கட்சிகள்  உள்ளாட்சித் தேர்தலில் கனிசமான  தொகுதிகளை பெற்று தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட விரும்புகின்றன.

குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வடமாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை  வைத்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.  திமுக வசம் இருந்த இந்த தொகுதி  ஆளுங்கட்சி வசமானதற்கு முக்கிய காரணம் பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர்  டாக்டர் ராமதாஸ்  வெளிப்படையாக கூறிவருகிறார்.

இதனை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலில்  வேலூர்,ஆவடி, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளை  அதிமுகவிடம் இருந்து பெறவேண்டும் என்பதில் பாமக தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.   சென்னை  மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட பாஜகவும் விரும்புவதாக தெரிகிறது. அதே நேரத்தில் அதிமுக சென்னை மாநகராட்சியை   கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் 25 சதவீதத்திற்கு குறையாமல்  மேயர்,நகர்மன்றத்தலைவர்,பேரூராட்சித் தலைவர்,மாவட்ட ஊராட்சித் தலைவர்,ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை பெற வேண்டும் என்பதில் பாமக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *