ரஜினிக்கு பதிலடி கொடுத்த நமது அம்மா நாளேடு!!!

சென்னை, நவம்பர்-19

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளேட்டில் கடுமையாக தாக்கி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கமலின், 60 ஆண்டு கலையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நேரு உள் விளையாட்டரங்கில், இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில்: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இ.பி.எஸ்., முதல்வர் ஆவார் என, அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரது ஆட்சி சில மாதங்கள் கூட தாக்குபிடிக்காது என்றனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தமிழக அரசியலில் நேற்று நடந்த அதிசயம், இன்றும் நடக்கிறது; நாளையும் நடக்கும். என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில்; அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாது. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார்.

சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். முதல்வராக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது. முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர். அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர்.

ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் தமிழ் திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *